• Fri. May 3rd, 2024

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட அமைச்சர்கள்

Byவிஷா

Apr 4, 2024

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்;ச்சியின் போது, அமைச்சர் பொன்முடி, பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு அமைச்சரைப் பார்த்து, ‘நீ பேசியது போதும்’ என வெடுக்கென மைக்கைப் பிடுங்கியது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் பொன்முடி கலைஞர் அறிவாலயம் வந்து தரைதளத்தில் விழுப்புரம் தொகுதியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்பு முதல் தளத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு சென்றார்.
அவருக்கு முன்பு வருகைபுரிந்த அமைச்சர் மஸ்தான் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். பொன்முடி வந்தவுடன் பேச்சை முடித்துகொண்டு, “அடுத்ததாக அண்ணன்..” என மஸ்தான் பேச முயற்சிக்கும்போது வெடுக்கென மைக்கை பிடுங்கிய பொன்முடி “எனக்கு முன்பே வந்துட்டியா நீ பேசியது போதும்” என்றார். தான் பேசி முடிக்கவில்லை என்று கூறி மைக்கை தருமாறு மஸ்தான் கேட்டபோதும் “உட்காரு” எனக் கூறி தன் உரையைத் தொடங்கினார் பொன்முடி. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அமைச்சர்கள் இடையே வாக்குவாதம் ஏன், நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது என்று திமுகவினரிடம் கேட்டபோது, “திமுக தலைமை மஸ்தானை மாவட்டச் செயலாளராக்கி, பின் அமைச்சராக்கியது பொன்முடியை அப்செட் ஆக்கியது. இதனால் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் அமைச்சர்கள் பொன்முடி ஆதரவாளர்கள், மஸ்தான் ஆதரவாளர்கள் என பிளவுபட்டனர். இதனால் நகராட்சியில் உள்ள திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக நகர்மன்ற உறுப்பினர்களே நின்றனர். இதனால் மன்றக் கூட்டம் நடைபெறும் போதெல்லாம் கூச்சல் குழப்பம் நீடிக்கிறது.

இதற்கிடையே அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பும், அதன்பின் பதவியேற்பும் நடைபெற்றது. அப்போது மஸ்தான் பொன்முடியை சென்று பார்க்கவில்லை. தொலைபேசியில்கூட நலம் விசாரிக்கவில்லை என்ற கோபம் பொன்முடிக்கு இருந்தது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வரும் மஸ்தான் தன்னை அழைத்து கொண்டு மேடைக்கு செல்வார் என பொன்முடி தரை தளத்தில் கூட்டத்தில் இருந்தார். ஆனால் மஸ்தான் நேரடியாக மேடைக்கு சென்றது மேலும் அவரை எரிச்சலூட்டியது.
ஆனால், “நோன்பு திறக்கும் நேரம் எதுவென்று இஸ்லாமியரான மஸ்தானுக்கு நன்றாக தெரியும். அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேடைக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர் முன்கூட்டியே மேடைக்கு சென்றுவிட்டார். இதனை அறிந்த பொன்முடி மேடை சென்ற பின்பு நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே” என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தானிடம் கருத்து கேட்க முயன்றும் பதில் பெற இயலவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *