• Tue. May 21st, 2024

ராமநாதபுரத்தில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது : ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Byவிஷா

Apr 30, 2024

கோடை வெயிலின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில், நீர், மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, ராமநாதபுரத்தில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், மோடியே மீண்டும் 3வது முறையாக பிரதமராக வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து, எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு சார்பில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தன்னை நீக்கியது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, அதிமுக உரிமை மீட்புக் குழுவை ஆரம்பித்து, தனி நிர்வாகிகளை மாவட்டம்தோறும் ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார், ஓபிஎஸ்.
இந்த நிலையில், இவர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உரிமை மீட்புக் குழு சார்பில், ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் தன்னுடைய அதிமுக உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் மூலம் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, அதிமுக உரிமை மீட்புக் குழுவின் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில், சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் திருவிக நகர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இதில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓபிஎஸ் பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம், பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வருடம் வெயில் கடுமையாக இருக்கும். ஆகையால், மக்களின் தாகத்தைத் தீர்க்க, மக்களுக்காக தண்ணீர் பந்தல்களை திறந்து வருகிறோம். ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *