சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது கோரிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்குவார்கள்.
இங்கு வழங்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான திங்கள் கிழமை தோறும் குவிவது வழக்கம். இன்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரங்களில் சுற்றித்திரிந்த குரங்குகள் திடீரென குறை தீர்க்கும் கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தரையில் படுத்து உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குரங்குகளை கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் குரங்குகளை விரட்டி அடித்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் குரங்குகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்ததாக நகைப்புடன் பேசிக் கொண்டனர்.