• Sat. Oct 5th, 2024

சிறுகதை: பிடித்தது, பிடிக்காதது

அன்று காலை 4 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. வழக்கமாக 5 மணிக்கு எழுந்துதான் பாடங்களைப் படிப்பான். அவனுக்கு மனதிலே ஒரு குறிக்கோள் இருந்தது. நிறைய மதிப்பெண் பெற்றுப் பத்தாம் வகுப்பில் தேறினால்தான் அவன் விரும்பும் மருத்துவக் கல்விப் பாடங்களைப் பதினொன்றாம் வகுப்பில் பெற முடியும். இந்தக் குறிக்கோள் அவன் உள்ளுணர்வைச் சதா துளைத்துக் கொண்டே இருக்கும் அதனால்தான், அலாரக் கடிகாரத்தின் துணையில்லாமலேயே தினமும் 5 மணிக்கே எழுந்து விடுவான். ஆனால், இன்று அவனுக்கு விழிப்பு வந்ததற்குக் காரணம் அவன் குறிக்கோளாகிய மருத்துவப் படிப்பு அல்ல. அவனது நண்பன் ராமுவைப் பற்றித்தான்.
ராமு, சோமுவின் உயிர் நண்பன். எல்லாவற்றிலுமே இருவரும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டவர்கள். ஆனால், குறிக்கோளில் வௌ;வேறானவர்கள். ராமுவிற்கு இயற்கையை ரசிப்பதில் அவ்வளவு ஆர்வம். காலையில் எழுந்ததும் கொஞ்ச நேரம் படிப்பான். அதன்பின்னர், அவர்களது வீட்டில் உள்ள தோட்டத்தில் செடி, கொடிகளைக் கண்டு ரசிப்பான். ரோஜாச்செடியில் விரியப்போகிற மொட்டு அவனுக்குப் பிடிக்கும்; மலர்ந்து மணம் வீசும் ரோஜாவும் பிடிக்கும். ஆனால், அந்த ரோஜாப்பூவைப் பறிப்பது மட்டும் அவனுக்குப் பிடிக்காது. அருகம்புல்லில் இருக்கும் பனித்துளிகளைக் இமை மூடாமல் பார்த்து மகிழ்வான். சற்றே வெயில் வந்ததும் பனித்துளிகள் மறைந்து போகும். அப்போதும் அவனுக்கு அருகம்புல்லைப் பிடிக்கும்.
அதிகாலை வேளையில் பனித்துளிகளுடன் இருக்கும் அருகம்புல்லைப் படம் வரைவான். அதன் பக்கத்திலேயே வெயிலில் மறைந்த பனித்துளி மறைந்த அருகம்புல்லையும் வரைவான். அப்போது அவனுக்கு மாடி வீட்டு மகாலட்சுமியின் நினைப்பும் வரும், கோடி வீட்டுக் குப்பனின் மகன் சுப்பனின் நினைப்பும் வரும். அருகம்புல்லிற்கு அருகில் அவர்களைப் படமாக வரைவான். ஏழ்மையின் வாட்டமும், செல்வத்தின் செழிப்பும் நெஞ்சைத் தைக்கிற மாதிரி படம் வரைவான்.
பறக்கின்ற பட்டாம்பூச்சி பிடிக்கும். குரைக்கிற நாய் பிடிக்கும். பட்டாம்பூச்சியைக் கையில் பிடிக்க மாட்டான். குரைக்கிற நாயைக் கல்லால் அடிக்க மாட்டான். மரம், செடி, கொடிகள், விலங்குகள், பறவைகள் எல்லாம் இவனுக்கு நெருங்கிய உறவு. அவற்றைப் பார்த்து ரசிப்பதும், படம் வரைந்து மகிழ்வதும், இவனுக்கு மனதிலே பதிந்து விட்ட பேரின்பம். இவன் உள்ளத்திலே ஒளிந்து கொண்டிருந்த ஓவியன்தான் இவன் மனதில் குறிக்கோளாக அமர்ந்திருக்கிறான்.
ராமுவைப் பார்க்க முதல் நாள் காலை அவன் வீட்டுக்கு சோமு போயிருந்தான். அப்போது நடந்த நிகழ்ச்சி சோமுவை மிகவும் பாதித்து விட்டது. அதுவும், தன்னையும், ராமுவையும் அவன் அப்பா ஒப்பிட்டுப் பேசி அவனைத் திட்டியதுதான் இவனால் பொறுக்க முடியவில்லை. தோட்டத்தில் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ராமுவை அவன் அப்பா கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்தார். “நீ டாக்டராக வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். நீயோ செடிகளைப் பார்க்கிறாய், கொடிகளைப் பார்க்கிறாய், காலை நேரத்தில் கவனமாகப் படிக்காமல், நீ இப்படிச் செய்து கொண்டிருந்தால் நீ எப்படி டாக்டராக முடியும்?”
உன் நண்பன் சோமுவைப் பார். அவன் டாக்டருக்குப் படிக்கப் போவதாக என்னிடம் கூறினான். அவன் அதிகாலை 5 மணிக்கே எழுந்து படிக்கத் தொடங்கினால் பள்ளி செல்லும் வரை படிப்பு, பள்ளியிலும் படிப்பு, வீட்டுக்கு வந்ததும் படிப்பு என்று படிக்கிறான். இப்படிப் படித்தால்தானே டாக்டருக்குப் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று அவருடைய ஆசைகளை அவன் மீது திணித்துக் கொண்டிருந்தார்.
ராமுவை அவனது அப்பா திட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த சோமுவின் மனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது. இப்படிப் பிள்ளைகள் மீது பெரியவர்கள் அவர்களின் கனவுகளையும், ஆசைகளையும் திணிப்பதும் என்ன நியாயம்? அவரவர் கனவு, அவரவர் ஆசை, அவரவர் குறிக்கோள் என்று அவரவர் முயன்றால்தானே வெற்றி பெற முடியும். பிள்ளைகள் எதில் நாட்டமாய் இருக்கிறார்கள், எவற்றில் அக்கறை காட்டுகிறார்கள், அவர்கள் இயல்புக்கேற்ற வழிமுறை என்ன? என்பதைத் தெரிந்து பிள்ளைகளைப் பிள்ளைகளை வழிப்படுத்துவதுதானே சரியாக இருக்கும்! ராமுவின் விருப்பப்படி படித்து முன்னேற அவன் அப்பா துணையாக இருக்க வேண்டும். அவரை எப்படி மாற்றுவது என்பது பற்றி சோமு தீவிரமாகச் சிந்தித்தான்.
சோமு அன்று காலை பள்ளிக்குச் செல்லும் முன் ராமுவின் வீட்டிற்குச் சென்றான். ராமுவின் அப்பாவைப் பார்த்து, “மாமா! இன்று எனக்குப் பிறந்தநாள். நீங்களும், அம்மாவும், ராமுவும் இன்றிரவு எங்கள் வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும்” என்று அழைத்தான். “பள்ளி முடிந்து விடும், அலுவலகமும் முடிந்து விடும் என்பதால்தான் இரவுச் சாப்பாட்டுக்குக் கூப்பிடுகிறேன்”. ராமுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. சோமுவின் பிறந்தநாளுக்கு அவர்களை விருந்துக்கு அழைப்பது அவனுக்கு வியப்பாக இருந்தது. சோமுவின் வீட்டிற்குப் போவதென்றால் அவனுக்கு மகிழ்ச்சிதான். போகவேண்டுமென்றுதான் அவனும் நினைத்தான். அவன் நினைத்ததைப் போலவே, அவனது அப்பாவும் விருந்திற்கு வர ஒப்புக்கொண்டார்.
இரவு 7 மணிக்கே வீட்டுக்கு வந்த ராமுவின் அப்பா, வரும் வழியிலேயே அழகான பென்சில், பேனா பெட்டி ஒன்றை வாங்கி வந்திருந்தார். ராமுவுக்கு அந்தப் பரிசு மிகவும் பிடித்திருந்தது. சோமுவின் பிறந்தநாள் பரிசாகக் கொடுக்க மிக அருமையான பொருள் அதுதான் என்பதில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சி.
சோமுவின் வீட்டுக்கு அப்பா, அம்மாவுடன் ராமு வந்தான். சோமுவுக்கு ஏக மகிழ்ச்சி. “வாங்க மாமா!, வாங்க மாமா” என்று வாய்நிறைய வரவேற்றான். பெரியவர்கள் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சோமுவும், ராமுவும் மகிழ்ச்சியாக அரட்டை அடித்தார்கள். சோமுவின் அம்மா சாப்பாட்டு மேஜையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து பலகாரங்களை இலையில் பரிமாறியபின் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள்.
எல்லோரும் சாப்பாட்டு மேஜை அருகே வந்து அமர்ந்தார்கள். “சாப்பிடுங்கள்” என்று கூறிய சோமுவின் அம்மா, சாம்பார் ஊற்றினாள். “கத்தரிக்காய் சாம்பாரா?” எனக்கு ஊற்றாதீர்கள், எனக்கு ஒவ்வாது” என்றார் ராமுவின் அப்பா. “மிளகாய், வெள்ளைப்பூண்டுச் சட்டினி போடுகிறேன்” என்று அம்மா சொன்னதும், அடடா, “வெள்ளைப்பூண்டும் என் உடம்புக்கு ஒவ்வாது” என்றார். “சரி, இந்த மைசூர்பாகு சாப்பிடுங்கள்” என்றான். சோமு, ஐயையோ! அவருக்கு சர்க்கரை வியாதி சாப்பிட மாட்டாரே” என்றாள் ராமுவின் அம்மா.
“பிறந்தநாள் விருந்துக்கு அழைத்து விட்டு உங்களுக்கு ஒவ்வாத பலகாரங்களையே செய்து விட்டோமே! மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பதறினாள் சோமுவின் அம்மா. பரவாயில்லை, “இட்லியும், மிளகாய் பொடியும் மட்டும் போதும்” என்றார் ராமுவின் அப்பா. ராமு மிகவும் சுவைத்துச் சாப்பிட்டான். அவன் அம்மாவுக்கு அந்தப் பலகாரங்கள் மிகவும் பிடித்திருந்ததால் ருசித்துச் சாப்பிட்டாள்.
அப்போதுதான் பேசத் தொடங்கினான் சோமு. “பார்த்தீர்களா மாமா! எங்கள் வீட்டுப் பலகாரங்கள் உங்களுக்கு மட்டும் ஒத்துப் போகவில்லை. உங்கள் மகன் ராமுவுக்கும், அவன் அம்மாவுக்கும் மிகவும் பிடித்திருக்கின்றன. எனக்குத் தெரிந்துதான் உங்களுக்கு ஒவ்வாத பலகாரங்களைச் செய்யச் சொன்னேன். உங்களுக்கு ஒவ்வாத பலகாரங்களைச் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினால் எப்படி? உங்களைக் கட்டாயப்படுத்திச் சாப்பிடச் சொல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. உங்களைக் கட்டாயப்படுத்திச் சாப்பிடச் சொல்லாமல் இருப்பது போல், நீங்களும் என் நண்பன் ராமுவுக்கு பிடிக்காத எதையும் கட்டாயப்படுத்த மாட்டீர்கள் அல்லவா? அவன் டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் போதுமா? அவனுக்கு ஆர்வமிருக்கிறதா, பிடிக்கிறதா என்று கேட்க வேண்டாமா? எதில் ஆர்வமிருக்கிறதோ, அதைத்தானே படிக்கச் சொல்ல வேண்டும்? இதை எப்படி நளினமாகப் புரிய வைப்பது. அதனால்தான் உங்களுக்குப் பிடிக்காதது, ஒவ்வாதது என்று தெரிந்த பலகாரங்களையே செய்யச் சொன்னேன் என்றான் சோமு.
சோமுவின் பேச்சைக் கேட்ட ராமுவின் அப்பா சற்று யோசித்தார். சோமுவின் பேச்சில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டார். தன் நண்பன் ராமுவின் உணர்வுகளைச் சாமர்த்தியமாகத் தம்மிடம் தெரிவித்த சோமுவின் செயலைப் பாராட்டினார். பெற்றோர் தம் ஆசைகளைப் பிள்ளைகளிடம் தெரிவிக்கலாமே தவிர, அவற்றைத் திணிக்கக் கூடாது என்பதைப் புரியவைத்த சோமு, தம் மகனுக்கு நண்பனாகக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.
இனியும் ராமுவுக்குப் பிடிக்காத டாக்டர் படிப்பை அவனைப் படிக்கச் சொல்லி அவன் அப்பா கட்டாயப்படுத்துவாரா என்ன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *