இலங்கை நாட்டில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமயிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ள தகவல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இலங்கை நாட்டில் இறக்குமதியை சார்ந்த பொருளாதாரத்தை நிலை நிறுத்த, அத்தியாவசிய பொருட்களுக்கு நிதியளிக்க தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 50 மில்லியன் டாலர்களுக்கு குறைவாக இருக்கிறது. ஆகவே இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும். பொருாளதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதை தாமதப்படுத்தியதன் வாயிலாக அரசு தவறிழைத்து இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் இப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த சர்வதேச அமைப்பிடமிருந்தும் நிதி உதவி பெற இன்னும் சில மாதங்களாகும். இலங்கை அரசு 2019-ல் வரிகளை அதிரடியாக குறைத்து மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்து இருக்கிறது. ஆகையால் விரைவில் புது பட்ஜெட் வெளியிடப்பட்டு, அதில் வருவாயை உயர்த்தும் அடிப்படையில் வரிகள் அதிகரிக்கப்படும். இது போன்ற போர்க்கால நடவடிக்கைகளின் வாயிலாக இன்னும் இரண்டு ஆண்டுகள் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும். எனினும் அதுவரையிலும் இந்த நெருக்கடிகளை நாம் அனைவரும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என அலி சப்ரி தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.