ஷவர்மா சாப்பிட்ட கேரள மாநில மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதனால் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது என பார்க்கலாம்.
கேரளா மாநிலம் காசர்கோட்டில் தரமற்ற ஷவர்மா சாப்பிட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்துள்ள நிலையில், அவருடன் சேர்ந்து அங்கு ஷவர்மா சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய நிலையில், கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஷவர்மா விவகாரம் பெரும் பேசு பொருளாகியுள்ள இந்த சூழலில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் இரவு துரித உணவுகத்தில் ஷவர்மா சாப்பிட்டதாகவு, இரவில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஷவர்மா தயாரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து இணையத்தில் தேடிய போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து ஷவர்மா சாப்பிடுவது மிக மோசமான வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஷவர்மா தாயாரிக்க குபூஸ் எனப்படும் ரொட்டி தயாரிக்கும் மைதாவை பயன்படுத்துகின்றனர். மைதா மாவில் நார்ச்சத்து கிடையாது. மைதாவை வெள்ளை நிறமாக மாற்ற, அதிகளவில் ரசாயனம் உபயோகப்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து மைதா உட்கொண்டால், குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. குபூஸ் முழுமையாக சமைக்கப்படுவதில்லை. அரை விநாடி மட்டுமே நெருப்பு அனலில் வாட்டுகின்றனர். முழுமையாக வேகாத மைதா, உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். ஷவர்மாவில் சேர்க்கப்படும் மயோனீஸ் தயாரிக்க, சமைக்காத முட்டை, எண்ணெய் மற்றும் வினிகரை உபயோகிக்கின்றனர். சமைக்காத முட்டையில் அதிகளவில் பாக்டீரியா உள்ளது. முட்டையுடன் எண்ணெய் சேர்ப்பதால், அதிகளவில் கொழுப்பு உடலில் சேர்ந்து ஜீரண மண்டலத்தை பாதிக்கும்.
இரவு நேரத்தில் பச்சை முட்டை மற்றும் எண்ணெய் கலவையை சாப்பிடுவதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சாலை ஓரங்களில் வண்டிகளில் வைத்து விற்பதால், வாகனங்களில் இருந்து வரும் தூசி, புகை அனைத்தும் ஷவர்மாவுக்கு உபயோகிக்கும் கோழிக்கறியில் படிந்து விடுகிறது. அதை தயாரிப்பவரின் கையில் இருக்கும் பாக்டீரியா, உணவு மூலம் நம் உடலுக்குள் எளிதாக சென்று விடும். சில கடைகளில் முதல் நாள் விற்காத எஞ்சிய ஷவர்மாவுக்கான கோழி மாமிசத்தை, குளிர்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் விற்கின்றனர். இதனால் சில சமயங்களில் விஷமாக மாறி உயிரை குடிக்க வாய்ப்புள்ளது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.