• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டத்தில் பெண் தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல்..,

ByAjmalkhan saleemraja

Nov 23, 2026

தேனி மாவட்டத்தில் பெண் தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாசமாகப் பேசி, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், வீட்டின் அருகே கத்தியால் சரமாரியாகத் தாக்கியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஊராட்சியில் சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அறிமுகமான M.S.P. ராஜ்குமார் என்பவர், வழக்குப் பிரச்சினை தொடர்பாக உதவி செய்வதாகக் கூறி தன்னிடம் நெருக்கமாகப் பழகியதாகவும், பின்னர் இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசி, பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னைத் தவிர்க்கத் தொடங்கிய பின்னரும், பணியாற்றும் இடம் மற்றும் வீட்டின் அருகே காரில் வந்து நின்று தொந்தரவு செய்ததாகவும், ஊர் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்களிடம் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 18.10.2026 அன்று ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், 19.10.2026 அன்று 350/2026 என்ற குற்ற எண்ணில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 29.10.2026 அன்று காலை சுமார் 7 மணியளவில், தான் வீட்டில் இருந்தபோது கத்தியுடன் வந்த ராஜ்குமார், தன்னைத் தலை, தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாகக் குத்தித் தாக்கியதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளார்.

தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட பெண், தன்னைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்படும் M.S.P. ராஜ்குமார் மற்றும் முஜிபூர் ரகுமான் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் மற்றும் கத்திக்குத்து தாக்குதல் எனத் தொடர்ந்து எழுந்துள்ள இந்தப் புகார் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.