தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், ESI, EPF உள்ளிட்ட அடிப்படை சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பணியாளர்களின் வருகைப் பதிவேடு மற்றும் ஊதிய விவரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பணியாளர்களின் பெயரில் ஒதுக்கப்படும் தொகைகள் முழுமையாக அவர்களிடம் சென்றடைவதில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவனிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் ஊதியப் பிரச்சினைக்கு நீதி கேட்டுப் போராடிய இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜெகநாதன் மீது வீரபாண்டி பேரூராட்சியின் தலைவர் கீதாவும், கணவர் சசிகுமார் மற்றும் 10 பேர் சேர்ந்த கும்பலு போராட்டத்தில் ஈடுபட்ட ஜெகநாதனை தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், ஊதிய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய பெண் பணியாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன்,அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி, தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்களும், தொழிற் சங்க நிர்வாகி ஜெகந்நாதன், வீரபாண்டி காவல் நிலையத்தில் நேரில் புகார் அளித்தனர்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதா மற்றும் அவரது கணவர் சசிகுமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களின் ஊதிய முறைகேடு புகார், அதற்கு நீதி கேட்ட தொழிற்சங்க நிர்வாகி மீதான தாக்குதல் மற்றும் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


