டெல்லியில் இன்றைய காலை பொழுது கடுமையான குளிரில் விடிந்தது. நேற்று முன்தினம் 8 டிகிரியாக இருந்த வெப்பநிலை நேற்று அதிகாலை 4.4 டிகிரியாக சரிந்தது. சில இடங்களில் 4 டிகிரிக்கும் கீழே இருந்தது. ஒரே நாளில் இப்படி தாறுமாறாக குறைந்த வெப்பநிலை, மக்களை பாடாய்படுத்தி விட்டது. நள்ளிரவு முதல் விடிய விடிய இடைவிடாத பனிப்பொழிவு மற்றும் காற்றின் காரணமாக குளிர் அதிகரித்துள்ளது. டெல்லியின் இந்த வெப்பநிலை இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கூட இல்லை. அதைப்போல இமயமலையின் அடிவாரமான உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மற்றும் நைனிடாலிலும் இல்லை. தர்மசாலாவில் 5.2 டிகிரியும், நைனிடாலில் 6 டிகிரியும், டேராடூனில் 4.5 டிகிரியும் பதிவாகின. பனி மூடிய இமயமலையில் இருந்து, உறைபனி காற்று கிளம்பி டெல்லியை நடுங்க வைத்துவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள்
தெரிவித்தனர். கங்கை சமவெளிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியை காட்டும் செயற்கைக்கோள் படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த பனிக்காற்று, பனிப்பொழிவு காரணமாக தரைவழி மற்றும் ஆகாயவழி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லிக்கு சுமார் 20 ரயில்கள் 4 மணிநேரம் தாமதமாக வந்துள்ளன. இதைப்போல டெல்லியில் இருந்து கிளம்பிய ரயில்களும் தாமதமாக கிளம்பியுள்ளன. இந்த குளிரின் நிலை அடுத்த 3 நாட்களில் மேலும் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.