• Thu. Apr 25th, 2024

மூத்த காங். தலைவர் சுனில் ஜாகர் அரசியலுக்கு திடீர் முழுக்கு

பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் அரசியலுக்கே குட்பை சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

117 இடங்களுக்கான பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும். காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக தம்மையே காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார் நவ்ஜோத்சிங் சித்து.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் அரசியலுக்கே குட்பை சொல்லிவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கன்வார் சாந்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவ்ஜோத்சிங் சித்து தலைமையிலான மாநில காங்கிரஸ் கமிட்டியின் போக்கு பிடிக்காமலேயே சுனில் ஜாகர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டால் சுனில் ஜாகர் தமது முடிவை மறுபரிசீலனை செய்வார் எனவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சுனில் ஜாகருக்கு 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனால் சுனில் ஜாகர் முதல்வராகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி மேலிடம் சரண்ஜித்சிங் சன்னியை முதல்வராக்கியது. அப்போது முதலே சுனில் ஜாகர் அதிருப்தியில் இருந்து வந்தார்.

பின்னர் டெல்லி மேலிடம் சமாதானப்படுத்தி சில பொறுப்புகளையும் கொடுத்தது. இருந்தபோதும் சரண்ஜித்சிங் சன்னி, நவ்ஜோத்சிங் சித்து இடையேயான அதிகாரப் போட்டியில் சுனில் ஜாகர் போன்ற சீனியர்கள் ஓரம்கட்டப்பட்டனர்.

இதனால்தான் சுனில் ஜாகர் இப்போது ஒட்டுமொத்த அரசியலுக்கே முழுக்குப் போட்டுவிட்டார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். பஞ்சாப்பில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இன்னமும் குறையவும் இல்லை.

கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரை ஆம் ஆத்மியைவிட காங்கிரஸ் கட்சிக்கு ஒருசில இடங்கள்தான் குறைவாக கிடைக்கும் என்றே கூறுகின்றன. காங்கிரஸ் கட்சியில் நிலவும் இத்தகைய உட்கட்சி மோதல்கள்தான் ஆட்சி அதிகாரத்தை நூலிழையில் அக்கட்சி பறிகொடுக்க காரணம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

இதனை தொடக்கத்திலேயே டெல்லி மேலிடம் சரி செய்யாமல் போனதால்தான் சுனில் ஜாகர் போன்ற சீனியர்கள் கட்சியைவிட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *