

இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. ஆபரேஷன் சிந்தூரில் கலந்துகொண்ட ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 10-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த ஊர்வலம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ ராணுவ வீரர்கள் என்ன எல்லையில் சென்று சண்டையா போட்டார்கள் என விமர்சித்திருந்தார்.
இவரது பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் வேலையில் புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசிய செல்லூர் மீது முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் மோகன்,
ராணுவ வீரர்கள் பற்றி செல்லூர் ராஜூவுக்கு என்ன தெரியும் என்றும், அவருக்கு நாவடக்கம் தேவை என்று கூறினர். நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களை இழிவாக பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் எச்சரித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கோரி தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் மனு கொடுக்க உள்ளதாகவும்,எல்லையில் போராடி வரும் ராணுவ வீரர்களை வைத்து செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

