

திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார்.
தமிழக அறநிலையத் துறை மீது பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனினும், தமிழகத்தில் 1000 கோயில்களுக்கு மேல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றும், பல ஆயிரம் கோடி கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன என திமுக அரசு விளக்கம் அளித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அறநிலையத்துறை ஒழிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவளித்தார். அப்போது இந்து சமய அறிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் அன்னதான பிரபு எங்கள் தமிழக முதல்வர் என்றால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மூன்று கோடியே 50 லட்சம் பேர் அன்னதான திட்டத்தால் ஒரு ஆண்டிற்கு பயனடைந்து வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு ரூ.112 கோடி இந்த திட்டத்துக்கு மட்டும் செலவாகிறது. ஒருவேளை அன்னதான திட்டம் இந்த ஆட்சி ஏற்பட்ட பின் 27 கோயில்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 50 பேருக்கு என்று இருந்த அன்னதானத் திட்டத்தை பல இடங்களில் 100 பேருக்கு என்று மாற்றியமைத்து உள்ளோம். திருவிழாக்களில் இருநூறு என்ற அளவில் இருந்ததை 500 என்று அளவு எண்ணிக்கை அளவுகளை உயர்த்தி இருக்கிறோம்.
அறநிலையத் துறையில் நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடுவதும், எங்கு பார்த்தாலும் குடமுழுக்குகள் நடைபெறுவதும் எப்படி பாஜகவினருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பாமல் இருக்கும்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போல ஆன்மீகத்தை வைத்து அரசியல் நடத்தலாம் என்று நினைப்பவர்கள், அதற்கு இடமில்லை என்பதால் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். திமுக என்பது அடிக்க அடிக்க உயரும் பந்து போன்றது. எனவே, பாஜகவினர் அடித்துக்கொண்டே இருக்கட்டும்.. திமுகவினர் இன்னும் உற்சாகத்துடன் வீறுநடை போடுவார்கள். வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை வெற்றிபெற்று முதலில் சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை நிற்க வேண்டும் என சொல்கிறீர்களா என்று ஒரு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அழைக்கலாம். ஏற்கெனவே அவர்தேர்தலில் போட்டியிட்டுள்ளார், அண்ணாமலையை தேர்தலில் நிற்கச் சொல்லுங்கள். திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம்” என்று பதிலளித்தார்.

