கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பல கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிலோ கணக்கில் தங்கங்களை கைப்பற்றப்பட்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணல் குவாரி மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தது.மேலும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள் பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் இது குறித்து விசாரித்து வந்தனர். அந்த டைரியில் யார், யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
அதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதையடுத்து, முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், செந்தில் பாலாஜி. ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதன் மூலம் சேகர் ரெட்டி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறையினர் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 14 பேரும் விரைவில் பதில் அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து, திமுகவில் இணைந்து தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ள நிலையில் வருமானவரித்துறையினர் அனுப்பியுள்ள நோட்டீசும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.