நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழன் இல்லை என்றும், அவர் தேவையில்லாமல் கோமாளி போல் உளறுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்ட பாஜக நிர்வாகி மோடி கார்த்திக் இல்ல திருமண விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எச்.ராஜா வந்த போது, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எச்.ராஜா கூறுகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக தொடர்கிறது. அரசியல் ரீதியாக திமுகவுக்கு எதிர்நிலையில் பாஜக செயல்படுகிறது. 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமையும். ஆனால் அதைப் பற்றி இப்போது பேச வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவரிடம் ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கை பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. அதனால் ஆளுநரை பற்றி அவதூறாக பேசுவதை திமுக உள்ளிட்ட கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டு. அதேபோல் திருமாவளவன் ஒரு தீயசக்தி. பிஎஃப்ஐ அமைப்புக்கு ஆதரவாக பேசியவர் திருமாவளவன். அவர் பேசியதை பற்றி கவலையில்லை. ஆனால் திமுகவில் இருப்பவர்கள் பேசுவது சட்டத்திற்கு புறம்பானது. ஆளுநர் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்வது திமுகவிற்கு நல்லது என்று தெரிவித்தார்.