சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் குளிர்சாதனப் பெட்டி வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், குளிர்சாதனப் பெட்டி வெடித்த விபத்து ஏற்பட்ட வீட்டில் மாவட்ட கலெக்டர் ஏ.ஆர். ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் கலெக்டர் ராகுல்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மின்கசிவு காரணமாக குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக குளிர்சாதனப் பெட்டி உபயோகப்படுத்தாததால் வெடித்துள்ளது. நீண்ட நாள் பயன்படுத்தாத எலக்ட்ரானிக் பொருட்களை பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாக்கம் கோதண்டராமன் ஜெயலட்சுமி தெருவில் ஆர்.ஆர். பிருந்தாவன் என்ற பெயரில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் ராஜ் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு பார்கவி என்ற மனைவியும், ஆத்ரேயா என்ற 7 வயது மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் ராஜ்குமாரின் மாமியார் கிரிஜா (66), அவரது தங்கை ராதா (55) ஆகியோரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ராஜ்குமாரின் வீட்டில் இருந்து வெடி சத்தம் போன்று கேட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு ராஜ்குமாரின் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் புகை மூட்டமாக காணப்பட்டது. மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து சிதறி இருந்தது. வீட்டில் ராஜ்குமார், அவரது மாமியார் கிரிஜா, இவரது தங்கை ராதா ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர். பிரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வெடித்து சிதறியதும் இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் மற்றும் கியாஸ் வெளியேறி மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக பலியாகி இருப்பதும் தெரியவந்தது. ராஜ்குமாரின் மனைவி பார்கவி, மகள் ஆத்ரேயா ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஊரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நேரில் சென்று விசாரித்தார். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். உயிரிழந்த ராஜ்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் தான் அவர் ஊரப்பாக்கத்துக்கு திரும்பினார். மனைவி மகளுடன் சந்தோஷமாக இருந்த ராஜ்குமார் திடீரென பிரிட்ஜ் வெடித்து மாமியார்களுடன் உயிரிழந்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜ்குமாரின் வீட்டில் வெடித்து சிதறிய பிரிட்ஜை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மின்கசிவு ஏற்பட்டு குளிர்சாதனப் பெட்டி வெடித்தது எப்படி? என்பது குறித்து தடயங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வு முடிவுக்கு பிறகே பிரிட்ஜ் வெடித்து சிதறியது எப்படி என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் பயன்படுத்தி வந்த குளிர்சாதனப் பெட்டி உயிர் பலி வாங்கி இருப்பது குடியிருப்பு வாசிகளை மட்டுமின்றி வீடுகளில் பிரிட்ஜ் பயன்படுத்துவோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இன்று 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் கண்ணீர் மல்க செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறார்கள். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.