• Thu. Jun 1st, 2023

தடுப்பூசி செலுத்தாமல் வரும் மக்களை திரையரங்குகளுக்குள் அனுமதித்தால் சீல்…

Byகாயத்ரி

Nov 30, 2021

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

இதில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ சங்கங்கள், திரையரங்குகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புடைய அனைத்து சங்கங்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆட்சியர், அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம், அதனை அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்களின் நிறுவனங்கள், உறுதி செய்ய வேண்டும் என்றார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும். பணியின் போது முகக்கவசம் அணியாத அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை பணியிடை நீக்கமும், தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *