
தமிழகத்தில் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது..,
பள்ளிகள் திறக்கப்படும் நாளில் இருந்து முழுமையாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பள்ளிகளை தயார் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வளாகம் முழுவதையும் சுத்தப்படுத்தப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், கருப்பு பலகைகளை மையிட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும். இது மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சிக்கு உதவும்.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் போட்டித் தேர்வுகள் குறித்து பேச்சு, கவிதை, துண்டுப் பிரசுரம், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியானதாகவும், சுகாதாரமானதாகவும், தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மதிய உணவு இடைவேளை முடிந்து 20 நிமிடங்களுக்கு மாணவர்கள் கதைப்புத்தகங்கள் மற்றும் பிற பருவ இதழ்களை படிக்க வைக்க வேண்டும்.ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துவதே இந்த புதிய நெறிமுறைகளின் முக்கிய நோக்கம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
