• Fri. Dec 13th, 2024

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் விடுமுறை

Byவிஷா

Nov 19, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, அம்மாவட்டத்திற்கு மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. திருவாரூரில் விடிய விடிய மழை பெய்தது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதற்கிடையே, மழை காரணமாக இன்று (நவம்பர் 19) ஒருநாள் காரைக்கால் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
காரைக்கால் பகுதியில் தொடர் மழை பெய்துவருவதை அடுத்தும், இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தஞ்சை மாவட்டத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்துவருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.