• Thu. Apr 25th, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூ 1கோடி மோசடி

Byகுமார்

Jul 2, 2022

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி 1கோடி 26லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது – ஆட்சியர் அலுவலகத்திலயே 28நபர்களுக்கு இன்டர்வியு நடத்திய பலே மோசடி கும்பல்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள கே.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சமையல் காண்ட்ராக்டர் பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செக்கானூரணியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் சேகரை சந்தித்து பேசியபோது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் உதவியாளரான பாண்டியராஜன் என்பவரை தனது நண்பர் ரஞ்சித்குமாருக்கு நன்கு பழக்கமானவர் என கூறியதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைய காலிபணியிடங்கள் இருப்பதால் உங்கள் பிள்ளைகளை அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய சேகர் தனது மகன் மற்றும் மகளுக்கு வேலை வாங்கிதருமாறு கேட்டபோது தலா ஒரு உதவியாளர் வேலைக்கு 4லட்சம் ரூபாய் வீதம் 8 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். இதனையடுத்து வேலை குறித்து கேட்டபோது சில மாதங்களில் வந்துவிடும் என கூறியுள்ளனர்.


இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருவாய் துணை மற்றும் மதுரை மாநகராட்சி துணை அலுவலர் பணிக்கு வேலைக்கு மற்றும் பயிற்சிக்கு வருமாறு மதுரை மாவட்ட அலுவலகத்திலிருந்து வருவது போல் பணி ஆணை அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கிடத்ததாக எண்ணி சேகரின் நண்பர்களும், உறவினர்களும் அரசு வேலைக்கு சொல்லுங்கள் என்று சேகரிடம் கூறியுள்ளனர்
சேகர் இது குறித்து முனீஸ்வரனிடம் கேட்டபோது 100க்கும் மேற்பட்ட பணிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர் என்று கூறியுள்ளார்
இதனையடுத்து சேகரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான சுமார் 26 நபர்களிடம் அலுவலக உதவியாளர் பணிக்கு என ரூ.4லட்சம் முதல் 4லட்சத்தி 80ஆயிரம் என 17 நபர்களிடமும், அலுவலக ஆய்வாளர் பணிக்கு சுமார் 8லட்சம் வீதம் 5 நபர்களிடமும், துப்புரவு பணியாளர் பணிக்கு சுமார் 1லட்சத்தி் 50ஆயிரம் என மொத்தம் ரூ. 1கோடியே 26லட்சத்தி 60ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வேலைக்கான பணி ஆணை கொடுக்காமல் காலம் தாழ்த்திவந்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில் 5 மாதம் கழித்து பணம்பெற்றிருந்த சேகரின் மகன் , மகள் உட்பட 28 நபர்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் கையெழுத்துடன் வேலைப்பணி ஆணை அசல் நகலை பதிவு தபால் மூலம் ஆட்சியர் அலுவலகத்திருந்து வருவது போல் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்ததுள்ளனர்.
இதனை தொடர்ந்து 2021 நவம்பர் 23ஆம் தேதியன்று அலுவலக நேரத்திற்கு முன்பாகவே காலை 08.00 மணி முதல் 08.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வருமாறு கூறி வரவைத்துள்ளனர்
இதனையடுத்து மேற்படி நபர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கேன்டீன் அருகே உட்கார வைத்து வாடிப்பட்டி வட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து ஆட்சியரின் உதவியாளர் என கூறிய பாண்டியராஜன் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும் நேர்காணல் நடத்தியுள்ளனர்
அப்போது நேர்காணலுக்கு வந்த அனைவரிடமும் வழங்கப்பட்ட அசல் பணி ஆணைகளையும் மற்றும் அனைத்து படிப்பு சான்றிதழ்கள், PAN கார்டு, ஆதார் கார்டு. ஸமார்ட்கார்டு, காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ் ஆகிய அனைத்தையும் வாங்கிவைத்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இன்னும் 5 நாட்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று பணியில் சேருங்கள் என்று சொல்லி நாட்களில் அனுப்பிவைத்துள்ளனர்.


இதனையடுத்து பல நாட்கள் ஆகியும் வேலைக்கு அழைக்காத நிலையில் முனிஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித்குமார் ஆகிய மூவரும் வேலைக்கு சேர சொன்ன இடத்தில் விசாரித்த போது அப்படி ஒரு பணி ஆணை எதுவும் அவர்களுக்கு வரவில்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.இதனை தொடர்ந்து மூன்று பேரிடமும் பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டபோது தான் மாவட்ட ஆட்சித்தலைவரின் கையெழுத்துடன் போலியான பணிஆணை தயார் செய்து அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இதனையடுத்து பணத்தை திரும்ப கேட்டபோது பணத்தை தரமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக பணத்தை இழந்த சேகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்
இது குறித்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட செக்காணூரணியை சேர்ந்த முனீஸ்வரன் மற்றும் வைகை வடகரை பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான ரஞ்சித்தை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ஆட்சியரின் பெயரில் பணி ஆணை வழங்கியதோடு, ஆட்சியர் அலுவலகத்திலயே நேர்காணல் நடத்தி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *