

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், இந்திய எல்லைப் பகுதிகளில் 24 மணிநேரமும் இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளைக் கண்காணிக்கவும், அதன் குடிமக்களைப் பாதுகாக்கவும் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர், இந்தியாவின் 7,000 கி.மீ கடற்கரை மற்றும் வடக்குப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார். “நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், நமது செயற்கைக்கோள்கள் மூலம் சேவை செய்ய வேண்டும். நமது கடற்கரைப் பகுதிகளை நாம் கண்காணிக்க வேண்டும். முழு வடக்குப் பகுதியையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்று நாராயணன் கூறினார்.
செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாமல் இந்தியா முழு பாதுகாப்பை அடைய முடியாது என்று குறிப்பிட்ட வி. நாராயணன்இ தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், குறிப்பாக “அண்டை நாடுகள்” அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதால், விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு பாதுகாப்பு தயார்நிலைக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் அண்டை நாடுகளுடனான சிக்கலான எல்லைகள் தொடர்ந்து கண்காணிப்பு தேவைப்படுகின்றன, மேலும் இந்த பணியில் செயற்கைக்கோள்கள் இப்போது மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாகும் என்பதை நாராயணன் தெளிவுபடுத்தினார். இஸ்ரோ இதுவரை, 127 இந்திய செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. எல்லை தாண்டிய மோதல்களின் அச்சுறுத்தல் மற்றும் நிகழ்நேர உளவுத்துறையின் தேவை ஆகியவற்றுடன், விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு இந்தியாவிற்கு ஒரு மூலோபாய நன்மையை வழங்குகிறது என்று கூறினார்.
இந்த செயற்கைக்கோள்கள் வழங்கும் தொடர்ச்சியான கண்காணிப்பு, எல்லைகளுக்கு அப்பாலும் கடலிலும் எந்தவொரு விரோத நடவடிக்கையிலும் ஆயுதப் படைகள் விழிப்புடன் இருக்க உதவுகிறது. புவிசார் அரசியல் சவால்கள் நீடிக்கும்போது,செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதலீடு தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தயார்நிலை மற்றும் தொழில்நுட்பதிறன் பற்றிய தெளிவான செய்தியையும் அனுப்புகிறது என்று நாராயணன் தெரிவித்துள்ளார்.

