• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சசிகலா அரசியல் வருகை: ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஒற்றுமை நீடிக்குமா.., கானல் நீராகுமா!

Byவிஷா

Oct 25, 2021

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல் ஆளுங்கட்சியாக இருந்தது முதலே மோதல், சமாதானம், மீண்டும் மோதல் என உட்கட்சி பூசல் வெடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது சசிகலாவின் அரசியல் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தினால், இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு இன்னும் குறைந்தபாடில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


சசிகலாவின் அரசியல் வருகையை முன்னாள் முதல்வர் ஈ.பி.எஸ் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும், மறுபுறம் ஓ.பன்னீர்செல்வமும் மவுனம் காத்து வருகின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் எழவில்லை. இதனால் தனக்கு ஆதரவு அலை இருக்கிறது என்று நம்பி, தனது சுற்றுப்பயணத்தை அங்கிருந்து சசிகலா தொடங்க முடிவு செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை சமாளிக்க சசிகலா பக்கம் ஓ.பன்னீர்செல்வம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு அஸ்திரத்தை தொடர்ச்சியாக ஏவி வருகிறது. எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான இளங்கோவனுக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சமீபத்தில் ரெய்டு நடத்தியுள்ளது.


தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், ஜெயலலிதா பேரவையின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருபவர் இளங்கோவன்(57). கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வருமானத்தை விட 131 சதவீதம் (ரூ.3.78 கோடி) அதிக சொத்து சேர்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு இளங்கோவனுடன் தொடர்பில் இருந்த அதிமுக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாகவும் இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இளங்கோவன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டை கண்டித்து அறிக்கை வெளியிட எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்தார்.


இதற்காக அறிக்கை தயாரித்து அதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதைப் படித்து பார்த்த பன்னீர்செல்வம், ஆளுநரை சந்திக்க என்னிடம் கேட்டுவிட்டா சென்றீர்கள்? இப்ப மட்டும் எதற்காக என்னிடம் வருகிறீர்கள்? எடப்பாடி ஆளு தானே இளங்கோவன். வேண்டும் என்றால் அவரே கண்டித்து கொள்ளட்டும் என்று காட்டமாக கூறிவிட்டாராம். இதைக் கேட்ட பழனிசாமி, இளங்கோவன் என் ஆளா? அவர் கட்சிக்காக உழைத்தவர்.


அவர் மேல் ரெய்டு நடவடிக்கைகள் பாயும் போது கட்சி எப்படி சும்மா இருக்கும். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து ஒன்றும் தேவையில்லை என்று கூறி தனது பெயரிலேயே அறிக்கையை வெளியிட்டுவிட்டார். இதனால் இருவருக்கும் இடையிலான உரசல் மீண்டும் பொறி பறக்க ஆரம்பித்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதைக் கவனித்த அதிமுக மூத்த தலைவர்கள் உடனே இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.


நமது ஒற்றுமையின்மை சசிகலாவிற்கு சாதகமாக முடிந்துவிடும். எனவே சண்டை போட வேண்டாம் என்று சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. இதன் விளைவாகவே கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு நடக்கவிருந்த மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இந்த ஒற்றுமை தொடர்ந்து நீடிக்குமா? இல்லை சசிகலா அரசியலில் தீவிரம் காட்டும் போது கானல் நீராகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.