• Thu. May 2nd, 2024

கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் சசிகலா..

Byadmin

Feb 21, 2022

சிகலா அடுத்தடுத்து என்ன செய்ய போகிறாரோ? என்ற கலக்கம் சூழ்ந்த எதிர்பார்ப்பு அதிமுகவில் அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டு போகும்..

இந்த முறையும் அப்படி ஒரு கலக்கத்தில் அக்கட்சி மேலிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா, மாட்டாரா? அதற்காக எப்படி வியூகங்களை வகுக்கப் போகிறார்? என்பது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. ஜெயிலில் இருந்து வெளிவந்ததில் இருந்து சசிகலா மென்மையான மற்றும் அமைதி போக்குடன் அரசியல் செய்து வருகிறார்.

அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் சசிகலா.. ஜெ.விடம் 30 வருடம் லாபி செய்தவருக்கு எடப்பாடி & டீமை தன்வசப்படுத்த சசிகலாவுக்கு நன்றாகவே வழிதெரியும்.. ஆனாலும் மென்மை போக்கை, மிக மிக ஜாக்கிரதையாக கடைப்பிடித்து வருகிறார். விடுதலை ஆன பிறகு, ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிரடியான முடிவுகளை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா சூழலால் அமைதி காக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது..

அதன்பிறகுதான் அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக சொல்லி ஷாக் தந்துவிட்டு, மீண்டும் களத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பிறந்த நாள் அல்லது நினைவு நாள் வரும்போதெல்லாம் சசிகலா ஏதாவது அறிவிப்பு வெளியிடுவாரா? என்று எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் எழுவது வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது.. இந்த பிறந்த நாளினை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விமர்சியாக கொண்டாடவிருக்கிறார்கள். அன்றைய தினமாவது ஏதாவது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சசிகலா அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அல்லது அதிமுக அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பாரா? என்ற சந்தேகமும் எழுகிறது.. காரணம், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சில நிமிடங்கள் தியானம் செய்தது மிகப்பெரிய கவனம் பெற்ற நிலையில், அதேபோன்ற அஸ்திரத்தை சசிகலாவும் எடுக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால், சென்னை ராமாவரம் எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கும் காதுகேளாத வாய்ப்பேச முடியாத பள்ளிக்குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கி, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அங்கு செல்ல திட்டமிட்டுள்ளாரா சசிகலா… ஒருவேளை ராமாவரம் தோட்டத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள்..
இன்னொன்றையும் சொல்கிறார்கள், சசிகலா, டிடிவி தினகரன் இடையில் பனிப்போர் நீடித்து வரும் நிலையிர், இவர்களின் உரசலை ஒரு முடிவுக்கு கொண்டு வர முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்களாம்.. எப்படி பார்த்தாலும் பிப்ரவரி 24-ம் தேதி என்றாலே அதிமுக மேலிடத்தின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டதுபோல ஆகிவிடுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஏற்கனவே சசிகலா சுற்றுப்பயணம் செய்ய போவதாக தெரிவித்துவிட்ட நிலையில், அதற்கு முன்னதாக நடக்க போகும் ஜெ.பிறந்த நாள் விழாவில் ஏதோ ஒரு அதிரடி காத்திருக்கிறது என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.. பார்ப்போம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *