• Thu. May 16th, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் தொடர் பழுதாகும் சிசிடிவி கேமரா

Byவிஷா

Apr 29, 2024

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பழுதாகி வருவது மக்களிடையே பேசு பொருளாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அதிகரிக்கும் வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்து. இந்நிலையில் ஈரோட்டிலும் மேலும் ஒரு சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டமாக கடந்த 19 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மிதமான அளவில் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகளின் இயந்திரங்கள் அருகில் உள்ள மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் உதகையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் குறிப்பிட்ட அந்த மையத்தில் திடீரென சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் திரையில் தெரியாமல் போயின. இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
முதலில் இந்த காட்சிகள் ஹார்ட் டிஸ்கில் பதிவாகியிருக்கும் என்று கூறப்பட்டது. பின்னர் திரையில் மட்டும் தெரியாமல் போனதாக கூறப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்ட 173 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியும் விளக்கம் அளித்தார்.
அதிக வெப்பம் மற்றும் போதிய காற்றோட்ட வசதி இல்லாததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 26 நிமிடங்கள் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் 200 விழுக்காடு பாதுகாப்பாக இருப்பதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரியான அருணா தெரிவித்திருந்தார். தொழில்நுட்பக் கோளாறு ஏற்படாதபடி வரும் காலங்களில் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரோடு மாவட்டத்தில் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்களின் அறையில், நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சிசிடிவி கேமராவில் ஒன்றில் மட்டும் எந்த காட்சியும் பதிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குறிப்பிட்ட சிசிடிவி சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியின் சீல் வைக்கப்பட்ட கதவை நோக்கி இருந்த சிசிடிவி கேமரா நேற்று இரவு 11 மணி முதல் 3 மணி வரை பழுது ஏற்பட்டது.
இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு சிசிடிவி கேமரா பழுதை சரி செய்தனர் . சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து செயலிழந்து வருவது பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *