இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் , நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாணிக்காயிதம். ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் போஸ்டர் வந்ததிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தது. காரணம் இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார் என்பது தான். மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ராக்கி எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதை குறித்து பார்க்கலாம். படம் ஆரம்பிக்கும் போதே இந்த படம் முழுக்க முழுக்க புனையப்பட்ட கதை மேலும் வன்முறையை ஊக்குவிக்கும் எண்ணம் இயக்குனருக்கு கிடையாது,இந்த படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருக்கும் எனவே இந்த படத்தினை பார்ப்பது பார்க்காமல் இருப்பது உங்களது விருப்புரிமை என வாசகம் போடப்பட்டு கதை தொடங்குகிறது. முன்னுரை பரதேசப்பட்டினம் 1989 என தொடங்க சங்கையா மற்றும் பொம்மி இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை உயிருடன் எரித்து கொலை செய்ய திட்டமிடுகின்றனர். பொம்மி அந்த பெண்ணை பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி பாதி உயிருடன் வைத்துருப்பார், சங்கையா வந்து “என்ன இத்தனை வாட்டி தான் குத்திருக்க” என கேட்க அதற்கு பொம்மி அவ சாக கூடாது உயிரோட எரிக்கணும் என உக்கிரமாக பேச மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரிக்கப்படுகிறாள்.
இந்த கதை ஐந்து பாகங்களாக சொல்லப்படுகிறது. கதை பிளாஷ்பேக் நோக்கி செல்கிறது பொம்மி ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், பொம்மியின் கணவர் ஒரு ரைஸ்மில்லில் வேலை பார்க்கிறார்.இவர்களுக்கு தனம் என்ற ஒரு பெண் இருக்கிறாள். ரைஸ் மில்லில் பொம்மியின் கணவருக்கும் அந்த மில்லின் முதலாளிக்கும் சண்டை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டில் வந்த பிறகு வேலையை இழந்த கதையை பொம்மியிடம் சொல்ல நமக்கு எதுக்கு தேவை இல்லாத வம்பு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு செல் என அறிவுரை கூற போலீஸ்காரி பொண்டாட்டி சொன்னா கேட்டு தான ஆகணும் என்று கூறிவிட்டு பொம்மியின் கணவர் மறுநாள் காலை வேலைக்கு செல்கிறார். ரைஸ் மில்லில் மன்னிப்பு கேட்கும் போது பொம்மி குறித்து ஆபாசமாக பேச மீண்டும் பொம்மியின் கணவருக்கும் , ரைஸ் மில் முதலாளிக்கும் சண்டை பெரிதாகிறது. என் கிட்ட வாங்கி தின்கிற நாய் என் மூஞ்சி காரி துப்பிட்டியா உன்ன என்ன செய்யுறேன் பாரு என வீர வசனம் பேசிவிட்டு பொம்மியின் குடும்பத்தை கொலை செய்ய திட்டமிடுகிறான்.
போலீஸ்காரி என்ற திமிரில் தான் இவன் இப்படி பேசுகிறான் என்று அவர்களுக்கு வேண்டியபட்ட இன்ஸ்பெக்டர் மூலம் பொம்மி தனியாக வரவழைக்கப்பட்டு ரைஸ் மில் முதலாளி உள்பட நான்கு பேரால் தாக்கப்பட்டு கற்பழிக்கப்படுகிறாள்.தனது தாய் வந்து கூட்டி செல்வாள் என்று காத்துகொண்டிருந்த பொம்மியின் மகள் தனத்தை சங்கையா வீட்டிற்கு அழைத்து செல்கிறான்.ரைஸ் மில் முதலாளி அங்கிருந்த சிறுவர்களிடம் சென்று நீங்களும் அனுபவியுங்கள் என்று கூறிவிட்டு செல்ல அங்கு வந்த இன்ஸ்பெக்டர் அந்த சிறுவர்களை விரட்டியடித்து விட்டு , என்னை மன்னித்து விடு இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு அந்த இன்ஸ்பெக்டரும் பொம்மியை கற்பழிக்கிறான். மற்றொரு பக்கம் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சங்கையாவை தாக்கி விட்டு தூங்கிக்கொண்டிருந்த பொம்மியின் மகள் மற்றும் கணவரை உயிரோடு குடிசைக்கு தீ வைத்து எரித்துவிடுகின்றனர்.
நான்கு பேரும் போலீஸில் சரண்டராக அவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் அங்கிருந்து தப்பித்து விடுகின்றனர். இதற்கு இன்ஸ்பெக்டரும் வழக்கறிஞர் ஒருவரும் உதவி செய்கின்றனர். இவர்கள் சரணடைந்தால் அனைத்தும் சரியாகி விடுமா என்று பொம்மி கேட்க அங்கு தான் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கிறது. பொம்மியும் சங்கையாவும் சேர்ந்து அனைவரையும் பழிவாங்குகின்றனர். பொம்மியின் சங்கையாவின் தங்கை அதாவது தனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள் தான் பொம்மி.
இவர்களை எப்படி பழிவாங்கினார்கள் , போலீசில் சிக்கினார்களா என்பது தான் மீதிக்கதை. இந்த பழிவாங்கும் கதை பல மாடல்களில் தமிழ் சினிமாக்களில் எடுக்கப்பட்டது தான்.ஆனால் இந்த அளவுக்கு வன்முறை காட்சிகள் எந்த படத்திலும் இடம்பெற்றது கிடையாது. அதே போல கெட்ட வார்த்தைகள் சர்வ சாதாரணமாக பிரயோகம் செய்திருப்பது தான் மீண்டும் ஆச்சரியம். ரத்தம் பீரிட்டு வருவது , கத்தியில் வெட்டுபட்ட சதை என படம் முழுக்க இது போன்ற காட்சிகள் தான் அதிகம். ஆங்கிலத்தில் சிட்டி ஆப் காட் என்ற திரைப்படத்தை மிஞ்சிய வன்முறை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
படம் முழுக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் சுற்றி தான் கதை நகர்வதால் நடிப்பில் எதார்த்தத்தை காட்ட மெனெக்கெட்டு உள்ளனர். அது மட்டுமின்றி கீர்த்தி சுரேஷின் நடிப்பும் , செல்வராகவன் நடிப்பும் இங்கு பாராட்டப்பட வேண்டியது. பீஸ்ட் படத்தில் பார்த்த செல்வராகவனுக்கும் இந்த சங்கையாவுக்கும் அதீத வித்தியாசங்களை பார்க்க முடியும்.
மொத்தத்தில் 18 வயசுக்கு கீழ் உள்ளவர்கள் , இதயம் பலவீனமானவங்க , கர்ப்பிணி பெண்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம். இது முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்..