மதுரை விமானநிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியானார். இவரது உடல் இன்று தனி விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது காரில் புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அங்கு கூடி இருந்த பா.ஜனதா கட்சியினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு போலீசார் காரில் வீசப்பட்ட செருப்பை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக அங்கு நின்றிருந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.