காரைக்கால் தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில், தேசியக் கொடி தலைகீழாக பறந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா. தற்போது இவர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீடு டூப்ளக்ஸ் வீதியில் உள்ளது.நாட்டின் 75-வது சுதந்திர நாளையொட்டி வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியதை அடுத்து, காரைக்காலில் ஒரு சிலர் தங்கள் வீட்டு வாசல்களில் தேசியக் கொடி ஏற்றினர். அந்த வகையில், முன்னாள் எம்எல்ஏ அசனாவின் வீட்டு வாசலிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.ஆனால், தேசியக் கொடி தலைகீழாக பறந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் தங்கள் செல்போன்களில் அதை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைகீழாக பறந்த தேசியக் கொடியை இறக்கி மீண்டும் சரியாக பறக்க விட்டனர்.