• Fri. Apr 19th, 2024

அம்பேத்கருக்கு காவி உடை -இந்து மக்கள் கட்சி போஸ்டரால் பரபரப்பு..!

ByA.Tamilselvan

Dec 6, 2022

இந்து மக்கள் கட்சி போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை, நெற்றியில் விபூதி கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. . இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர், காவி உடை அணிந்து, நெற்றியில் விபூதி பட்டையும் குங்குமமும் வைத்துள்ள அம்பேத்கர் போஸ்டர்களை கும்பகோணம் முழுவதும் ஒட்டியுள்ளார்.
இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர், உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்தையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து குருமூர்த்தி கூறும்போது, “அம்பேத்கர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு சமூகத்தின் கீழ் கொண்டு வருவது ஏற்புடையதாக இல்லை. அவர் பவுத்த சமயத்தை தழுவி இருந்தார். அந்த மதம், இந்து மதத்தை சார்ந்ததாகும். அந்த பவுத்த மதத்தின் நிறமும் காவி ஆகும். அம்பேத்கரை ஒரு சமூகத்தினர் சாதிய ரீதியாக கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலும், அம்பேத்கர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதேபோன்று அவருக்கு போஸ்டர்கள் ஒட்டப்படும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *