சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல் குமார் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, ஒப்பந்தகாரர். இவர் அப்பகுதியில் மூன்று பள்ளிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை டெண்டர் எடுத்துள்ளார். இதற்கு அங்கு பி.டி.ஓ.,வாக இருந்த நிர்மல்குமார் கமிஷன் தொகை கேட்டுள்ளார். அதற்கு முன் பணமாக 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். லஞ்சம் தர விரும்பாத வெள்ளைச்சாமி சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவரிடம் போலீசார் அளித்த ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனுப்பினர். அதை வெள்ளைச்சாமி பி.டி.ஓ., நிர்மல்குமாரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிமன்னன், இன்ஸ்பெக்டர்கள் குமாரவேல் ராஜாமுகமது உள்ளிட்ட போலீசார் நிர்மல்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.
நேற்று லஞ்ச பணத்தை பெற இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவல் காரணமாக வெளியூர் சென்றுவிட்ட நிலையில் இன்று கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.