• Sun. Nov 1st, 2026

தேனியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி..,

ByAjmalkhan saleemraja

Nov 1, 2026

தேனி பங்களாமேடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தேனியில் இந்த அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள மேடை முன்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். தொடர்ந்து வெள்ளை மற்றும் காக்கி நிற சீருடை அணிந்திருந்த அவர்கள், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் காவிக் கொடியை ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அணிவகுப்பு பேரணி தொடங்கியது.

இந்தப் பேரணியானது பங்களாமேடு பகுதியில் தொடங்கி, பழைய பேருந்து நிலையம், சமதர்மபுரம், பாரஸ்ட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பங்களாமேடு பகுதியை வந்தடைந்தது.

பேரணியைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.