• Fri. Mar 29th, 2024

மோடிக்கு ரூ.8000 கோடியில் விமானம்; ரூ.2000 கோடியில் வீடு தேவையா?

ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறந்து, ரூ.2 ஆயிரம் கோடியில் வீடு கட்டி, ரூ.20 கோடி காரில் பயணிக்கிறார் பிரதமர் மோடி’ என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது.
பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு என அண்மையில் அவரது கார் மாற்றப்பட்டது. உயரடுக்கு பாதுகாப்பு வசதிகள் கொண்ட ’மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ என்ற 2 வெளிநாட்டு கார்கள் பிரத்யேகமாய் வரவழைக்கப்பட்டுள்ளன. தலா ரூ.13 கோடி பெறும் இந்த கார்கள், போயிங் விமானத்துக்கான உலோகம் கொண்டு, துப்பாக்கி தோட்டா மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள், விபத்து மற்றும் அவசரகாலங்களையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் புதிய கார் குறித்த சர்ச்சைகள் எழுந்ததும், அது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்தது. பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் வழக்கமாக, 6 வருடங்களுக்கு ஒருமுறை பிரதமரின் வாகனத்தை மாற்றக்கோருவார்கள். அந்த வகையிலான வழக்கமான நடவடிக்கையே இது என்று அரசு விளக்கமளித்தது.


ஆனால் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. கரோனா பரவலின் மத்தியில் தேசத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்திருக்கும் சூழலில் பிரதமருக்கு சொகுசுக் கார் தேவையா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புகிறது. ‘ரூ.8000 கோடி விமானத்தில் பறந்து, ரூ.2000 கோடியில் வீடு கட்டி, ரூ.20 கோடி காரில் பயணிக்கும் மோடியைப் போல நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் துறவியாக இருக்க ஆசைப்படுகிறான்’ என்று காங். செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் குறைகூறியுள்ளார். மேலும் ’கடந்த 2 ஆண்டுகளில் வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு என சாமானியர்கள் வாடிவரும் நிலைமையில், கடந்த 7 ஆண்டுகளில் 5 கார்களை மாற்றிய மோடி இந்த இக்கட்டான சூழலிலும் அதனை விடவில்லை. மக்களிடம் சதா ஆத்மநிர்பார் பேசும் மோடி தனக்கான காரை மட்டும் உள்நாட்டில் தேர்வு செய்யாது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்’ என சாடியுள்ளார்.


5 மாநில தேர்தலை பிரச்சாரத்தில் களமாடுவதற்கு வசதியாக பிரதமர் மோடிக்கான உயரடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் பரிந்து பேசுகிறார்கள். ஆனால் அந்த பிரச்சார மேடைகளில் மோடியின் கார்களை முன்வைத்து பேச தயாராக வருகிறது காங்கிரஸ் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *