• Wed. Apr 23rd, 2025

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி ஒதுக்கீடு

ByP.Kavitha Kumar

Mar 14, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21,906 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அளவிலான முதன்மை புற்றுநோய் மையமாக அறிவிக்கப்பட்டது. இதனை தரம் உயர்த்தி, 800 படுக்கைகளுடன் கூடிய தன்னாட்சி பெற்ற மையமாகச் செயல்படும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 120 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

நவீன முறையில் புற்றுநோயைக் கண்டறியும் வகையில் இடைநிலை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான நவீன மருத்துவக் கருவிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது. கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும் தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிட எச்விபி (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம், முக்கிய புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான சோதனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிட 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 2,754 கோடி ரூபாயும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 1,092 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,461 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 348 கோடி ரூபாயும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக மொத்தம் 21 ஆயிரத்து 906 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக மாற்றிடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெறலாம். இதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.225 கோடி ஒதுக்கப்படும் இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத, தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக ரூ.1,3807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்திட ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். அதன்படி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.

தோழி மகளிர் விடுதிகள் காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.77 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ. 275 கோடியில் மாணவியருக்கு 3 விடுதிகள் அமைக்கப்படும். இதில் ஆதிதிராவிடர், சிறுபான்மையினருக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்.

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கும் விரிவுப்படுத்தப்படும். மூன்றாம் பாலினத்தவருக்கு போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சி வழங்கி, ஊர்க்காவல் படையில் அவர்களை ஈடுபடுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவரை கொண்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவர்களுக்கான மதிப்பூதியம், பயிற்சி, சீருடை போன்றவை ஊர்க்காவல் படையினருக்கு சமமான வகையில் வழங்கப்படும்” என்றார்.