• Wed. Apr 24th, 2024

ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்

ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் பத்திரிக்கையான வெரைட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பாகுபலி படம் மூலம் உலகமெங்கும் பாப்புலர் ஆனவர் ராஜமவுலி. பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்கத்தில் உருவான படம் ரத்தம் ரணம் ரெளத்திரம். சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர் என அழைக்கப்பட்ட இப்படத்தில் நாயகர்களாக ஜூனியர் என்.டி.ஆரும், சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் நடித்திருந்தனர்.
மேலும் இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ், ஷ்ரேயா சரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இது சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம்பீம் மற்றும் சீதாராமராஜு ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதில் கொமரம்பீமாக ஜூனியர் என்.டி.ஆரும், சீதாராமராஜுவாக ராம்சரணும் நடித்திருந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிக் கிடந்த இப்படம் ஒருவழியாக கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. உலகளவில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.902 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் பத்திரிக்கையான வெரைட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோல் ராஜமவுலியின் பெயர் சிறந்த இயக்குனர்களுக்கான பட்டியலிலும், சிறந்த படத்துக்கான பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்று உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *