

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை சார்பில் இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சமீபத்தில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார்.
அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி என்று குறிப்பிட்டார். இளையராஜாவின் இந்த பேச்சை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து இருந்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இளையராஜாவிற்கு ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு சம்மன் சென்றுள்ளது. அதில் நீங்கள் சேவை வரி கட்டவில்லை.
இதற்காக சேவை வரி தடுப்பு சட்டத்தின் கீழ் நீங்கள் ஜிஎஸ்டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு முறை இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் இளையராஜா தரப்பு ஆஜரானாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சம்மனில் வரி விவரம் தொடர்பாக ஆதாரங்களுடன் வந்து எங்களை சந்தியுங்கள் என்று இளையராஜாவிற்கு சம்மன் சென்றுள்ளது.
இந்த மாதம் 24ம் தேதி வரை இளையராஜா தரப்பிற்கு இந்த விவகாரம் தொடர்பாக கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இளையராஜா விளக்கம் அளிக்க வேண்டும். நிலுவை தொகை இருந்தால் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அபராதத்தோடு வரியை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்மன் விவகாரம் தொடர்பாக தற்போது கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இளையராஜா தரப்பு ஜிஎஸ்டி அலுவலகத்தில் அட்டென்டன்ஸ் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் அவர் அல்லது அவரின் தரப்பு யாராவது ஆஜராகலாம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் நேரடியாக வர வேண்டிய கட்டாயம் இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் இளையராஜா தரப்பில் வேறு யாராவது ஆஜராகி விளக்கம் அளித்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இவரிடம் 174-2 சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதன் விளக்கம் ஏற்கனவே இருந்த சலுகையை மீண்டும் பயன்படுத்துவது தொடர்பானது.அதாவது போன வருடம் இருந்த வரி சலுகையை இந்த வருடம் வரி நீக்கப்பட்ட பின் மீண்டும் அதே சலுகையை பயன்படுத்தி குறைந்த வரி செலுத்துவது. இது போன்ற விவகாரங்கள் மிகப்பெரிய தவறு கிடையாது. செலுத்தப்படாத வரிக்கு அபராதத்துடன் கூடுதல் வரி செலுத்த வேண்டும். அதுவே பொதுவாக வரி செலுத்தும் விதியாக இருக்கும். இளையராஜா விவகாரத்திலும் அவருக்கு அபராதத்துடன் வரி செலுத்த சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.