• Fri. Apr 26th, 2024

என்னை விட எவரால் திறம்பட பணியாற்ற முடியும்? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தெலங்கானாவில் என்னை விட வலிமையான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என சிலர் கூறுகிறார்கள்; என்னை விட எவரால் திறம்பட பணியாற்ற முடியும்?” என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தெலங்கானா ஆளுநராக இரண்டு ஆண்டுகள் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக ஓராண்டு என தனது பணி அனுபவம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் புத்தகத்தை வெளியிட, டாக்டர் சவுந்தரராஜன் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

“நான் அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஒரு சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நான் அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன். அடிப்படையில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கிறேன். மக்களை ஆளுநர் அடிக்கடி சந்திப்பதால் பிரச்னை அதிகரிப்பதாக எழும் விமர்சனங்களை தூசிபோல் தட்டி விட்டு மக்கள் பணி செய்து வருகிறேன். நான் எங்கு சென்றாலும், என் மீது விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் மக்களோடு மக்களாக, இருக்கிறேன்.தெலங்கானா முதல்வருடன் பணிபுரிவது சவாலாகத்தான் உள்ளது. ஆனால் ஆளுநராக எனது பணியை சரியாக செய்து வருகிறேன். தெலங்கானாவில் வலிமையான ஒருவரை ஆளுநராக நியமிக்க இருப்பதாக வதந்திகள் பரப்புகிறார்கள். பெண் என்றால் வலிமை இல்லையா? என்னை விட வேறு யார் திறமையாக செயல்ட முடியும்? ஆளுநராக எனது பணியை சரியாக செய்திருக்கிறேன். வேறு யார் என்னைபோல பணியை சரியாக செய்வார்கள் என்று காட்ட முடியுமா? என்று சவால் விடுத்தார்.

“நான் எங்கு சென்று பணியாற்றினாலும் நான் பிறந்த தமிழ் நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்பதே பிரதான ஆசை. என் பணி குறித்து புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டு தெரிவிக்கிறார். அதே சமயம், தெலங்கானா முதல்வர் என் பணிகள் குறித்து விமர்சனங்களை அடுக்குகிறார். ஆளுநரும் முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம் . அதேபோல, ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலங்கானா மற்றொரு உதாரணம்.

தெலங்கானா முதல்வர் கூறிய ஒரு எம்எல்சிக்கு நான் கையெழுத்துப் போடவில்லை. அதுதான் பிரச்னைக்கு காரணம். அவர் சொன்ன இடத்தில் கையெழுத்திட நான் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ கிடையாது” இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *