ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்குகள் உள்ளன. இதில் 3 கொலை வழக்குகளில் இவரை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தலைமறைவான நிலையில் சென்னை காவல் துறை பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சரவணன் ஆந்திராவில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் பகுதியில் ரவுடி பாம் சரவணன் தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பின் சென்னைக்கு அழைத்து வந்தனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாம் சரவணனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
போலீசார் கைது செய்துள்ள ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவல் எழும்பூர் நீதிமன்ற பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து பொது வார்டில் இருக்கும் பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.