• Thu. Mar 28th, 2024

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் -கலெக்டர் பங்கேற்பு

ByS.Navinsanjai

May 23, 2023

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்பு!!
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு!!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1432 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை தொடர்பான புகார்கள், பட்டா தொடர்பான புகார்கள், மாற்றுத்திறனாளிகளின்‌ புகார்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுவாக அளித்தனர். 15 வருடங்களாக பட்டா மற்றும் அளவீடு செய்யாமல் தவித்து வந்த விவசாயி ஒருவர் அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நாளைக்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் நாளை நான் நேரில் வந்து ஆய்வு செய்வேன் எனவும் உத்தரவிட்டார். இதேபோன்று பத்து வருடங்களாக பல்லடம் நகராட்சியால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க முடியாமல் தவித்த டயாலிசிஸ் நோயாளியின் குடும்பத்தார் அளித்த மனுவின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் பல்லடம் அருகே கல்லம்பாளையத்தில் 20 நபர்கள் சேர்ந்து 36 பனை மரங்களை ஒரே இரவில் வெட்டி வீசியதாகவும் அதற்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயின் குடும்பத்தினர் அழித்த மனுவின் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக பல்லடம் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர இருக்கைகள் வசதி ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் பெயரில் நகராட்சி அதிகாரிகளிடம் chair வாங்க பணம் இருக்கா? இல்லை நான் கொடுக்கவா? என கேட்டதால் பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். நாளைக்குள் பொதுமக்கள் அமர இருக்கைகள் போட வேண்டும் எனவும் அதை புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற இரண்டாவது நாளே பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *