• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

குடிநீர் சப்ளை வழங்கவும், சேதமடைந்த தார் சாலையை முழுமையாக சீரமைக்கவும் மக்கள் கோரிக்கை…

ByK Kaliraj

Aug 1, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட விஸ்வநத்தம் ஊராட்சியை சேர்ந்த கவிதா நகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாததால் அப்பகுதி மக்கள் தினமும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஜக்கம்மாள் கோவில் பின்புறமாக சின்னத்தம்பி நகர், கவிதா நகர், அய்யனார்காலனி வரை செல்லும் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பராமரிக்கப்படாததால் தற்போது குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிற்சாலைக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள், தினமும் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.

மேலும் சமீபத்தில் பெய்த மழை நீர் வெளியேற முடியாமல் பள்ளத்திலேயே தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படாததால் சாலை ஓரங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன பல மாதங்கள் ஆகியும் அப்புறப்படுத்தப்படாததால் நோய்கள் உருவாகி வருகின்றன.

போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் நடமாட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்களாகியும் குடிநீர் சப்ளை வழங்கப்படாததால் கண்காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் குடிநீருக்கு தனியார் வாகனங்களில் விலைக்கு வாங்கி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் குடிநீர் சப்ளை வழங்கவும், சேதமடைந்த தார் சாலையை முழுமையாக சீரமைக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.