மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம் பட்டியில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியின் போது தாய்மாமன் வீட்டினர்
சீர்வரிசை கொண்டு வந்தனர்.

அப்போது பட்டாசு வெடித்ததில் மகால் முன்பு இருந்த பிளக்ஸ் பேனர் மீது பட்டாசு பட்டு தீ மளவளவென பிடித்து எரிந்தது. உடனே சீர்வரிசை கொண்டு வந்தவர்கள் காதணி விழாவிற்கு வந்தவர்கள் என அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் சுதாரித்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். சிலர் வாடிப்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
பட்டாசு வெடித்ததன் காரணமாக பிளக்ஸ் பேனர் தீ பிடித்து எறிந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதணி விழா மற்றும் திருமணம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் பல்வேறு எச்சரிக்கைகளை கூறி வரும் நிலையில் பொதுமக்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் கவன குறைவாக இருப்பதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்த நேரத்தில் அருகில் பொதுமக்கள் குழந்தைகள் இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என இந்த பகுதியில் இருந்தவர்கள் கூறினார்கள் இனிவரும் காலங்களிலாவது பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் காவல்துறையும் முறையாக அனுமதி பெற்றுள்ளார்களா என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



