• Thu. Apr 25th, 2024

மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்பு

ByKalamegam Viswanathan

Mar 7, 2023

இந்திய தேசிய பறவை விஷம் வைத்து கொலையா? மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்பு
வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மதுரை கருப்பாயூரணி அருகில் பூலாங்குளம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் பூலாங்குளம் கிராமத்தினர் இன்று அதிகாலை வயல்வெளிக்கு சென்ற போது அங்கு நமது இந்திய தேசிய பறவையானது மயில்கள் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மதுரை சரக வனத்துறை அதிகாரி ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூலாங்குளம் பகுதியில் உள்ள வயல்வெளிக்குள் மயில்கள் கூட்டம் கூட்டமாக புகுந்து இரை தேடுவது வழக்கம். இது அங்கு உள்ள சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் இது தொடர்பாக வனத்துறைக்கு புகார் கொடுத்தனர். அடுத்தபடியாக வயல்வெளி பகுதியில் கிராமத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பூலாங்குளம் பகுதியில் வயல்வெளியை மயில்கள் சூறையாடுவதால், அங்கு வசிக்கும் ஒரு சிலர் விஷம் வைத்துக் கொன்றனரா? என்று வனத்துறைக்கு சந்தேகம் உள்ளது.
அடுத்தபடியாக விவசாயிகளில் சிலர் வயல்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்து உள்ளனர். இதனால் விவசாய நிலத்தில் உள்ள தண்ணீரில் மருந்துகள் படிந்து உள்ளன. பூலாங்குளம் வயல்வெளிக்குள் புகுந்த மயில்கள் இரை தேடும்போது தண்ணீர் அருந்தியதால், அவை துரதிஷ்டவசமாக இறந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே வனத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் கால்நடைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அதன் பிறகு சம்பவ இடத்தில் மயில்களுக்கு உடற்கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயில்களின் இரைப்பை, குடல் ஆகியவை பிரித்து எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. மதுரை கால்நடை துறை அதிகாரிகளின் உடற்கூறாய்வு பரிசோதனை அடிப்படையில் தான், மயில்கள் எப்படி இறந்தன? என்பது பற்றிய விவரம் தெரிய வரும். இந்தியாவின் தேசிய பறவையாக மயில் உள்ளது. எனவே அதனை படுகொலை செய்வது சட்டவிரோத குற்றம் ஆகும். எனவே கருப்பாயூரணி போலீசார் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து பூலாங்குளம் கிராமத்தில் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *