


தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில்
அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான், சவுதி அரேபியா, குவைத் நாடுகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களை மீட்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையாளரிடம் கோரிக்கை

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் அவர்களும், அணைத்து மீனவர்கள் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் நாஞ்சில் ரவி அவர்களும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையாளர் உயர்திரு கஜலட்சுமி இ.ஆ.ப அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பாகிஸ்தான் சிறையிலும், சவுதி அரேபியா சிறையிலும், குவைத் சிறையிலும் சென்ற 14 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் இருக்கக்கூடிய தமிழகத்தை சார்ந்த 14 மீனவர்களை விரைந்து மீட்க மேலாண் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆணையாளர் அவர்களிடம் வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சார்ந்த அந்தோனிதாஸ் என்ற மீனவரும், சென்னையை சார்ந்த கருணாகரன், அசோக், ராஜன், முருகன், அருள்தாஸ், பாலமுருகன் என்ற ஆறு மீனவர்களும் மேற்குவங்க மாநிலத்தை சார்ந்த ஏழு மீனவர்கள் உட்பட 14 மீனவர்கள் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது அவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லையை தாண்டியதாக டிசம்பர் மாதம் 28ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சென்ற 14 மாதங்களாக அவர்கள் பாகிஸ்தான் உள்ள கராச்சி சிறையிலே அடைக்கப்பட்டுள்ளார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தை சார்ந்த அருள் என்ற மீனவரும், நாகப்பட்டினத்தை சார்ந்த சாஜன், ஐயப்பன் ஆகிய இரண்டு மீனவர்களும், கேரளா மாநிலத்தைச் சார்ந்த இரண்டு மீனவர் உட்பட ஐந்து மீனவர்கள் சவுதி அரேபியா நாட்டிலே மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்குள்ள காவல் அதிகாரிகளால் 1.1.2023 அன்று கைது செய்யப்பட்டு சென்ற 14 மாதங்களாக அவர்கள் சவுதி அரேபியாலே ஜெத்தா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த இயேசு, வினோத்குமார், சந்துரு, கார்த்திக் ஆகிய நான்கு மீனவர்கள் குவைத்து நாட்டிலே மீன்பிடிக்க சென்றபோது ஆழ்கடலிலே மீன்பிடித்துக் கொண்டிருந்த நேரத்திலே அவர்கள் குவைத்து கடலோர காவல் துறையால் 2.12.2023 அன்று கைது செய்யப்பட்டு சென்ற 15 மாதங்களாக அவர்கள் சிறையிலே அடைக்கப்பட்டுள்ளார்கள்.
மீனவர்களை விரைந்து மீட்குமாறு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் உயர்திரு கஜலட்சுமி இ.ஆ.ப அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்தந்தை சர்ச்சில் கூறும் போது : இலங்கை நாட்டில் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட பொழுது அச்செய்தி உடனடியாக மத்திய அரசுக்கும் மத்திய அரசு வழியாக மாநில அரசுக்கும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் பாகிஸ்தான் நாட்டிலோ அல்லது வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, குவைத், பகரின், ஈரான், ஐக்கிய அரபு நாடுகள், ஓமான், ஏமான் போன்ற நாடுகளில் நமது மீனவர்கள் மீன்பிடிக்கப்படுகின்ற பொழுது சிறைபிடிக்கப்பட்டால், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற செய்தியோ, எந்த சிறையிலே வைத்திருக்கின்றார்கள் என்ற செய்தியோ, அவர்களுக்கு என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியோ அந்நாடுகளில் உள்ள இந்திய தூதருக்கு அறிவிக்கப்படுவதில்லை. இந்திய அரசுக்கும் அறிவிக்கப்படுவதில்லை. ஆதலால் தமிழக அரசுக்கும் அவர்கள் நிலைமை என்ன என்று தெரிவதற்கு இயலாத நிலையை தொடர்ந்து வருகின்றது. வெளிநாட்டு சிறையில் இருக்கின்ற மீனவர்கள் விடுவிக்கப்படுவதிலே சிக்கல்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
அணைத்து மீனவர்கள் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் நாஞ்சில் ரவி கூறும் போது பாகிஸ்தான் சிறையில் இருக்கின்ற மீனவர்கள் அங்கிருந்து கடிதங்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி தாங்கள் மிகவும் துன்புறுத்தப்படுகின்றோம், சரியான உணவுகள் எங்களுக்கு கிடைப்பதில்லை, நாங்கள் உடல் நோய்களால் பாதிக்கப்படுகின்றோம். சுகாதாரமான சூழ்நிலை இங்கே இல்லை. இந்த நிலை நீடிக்கின்ற பொழுது எங்கள் உடல் கூட உங்களுக்கு கிடைக்காது என்ற நிலை உருவாகி வருகின்றது. ஆகவே காலம் தாழ்த்தாமல் விரைந்து எங்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள் என்று கண்ணீர் மல்க தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வருகின்றார்கள். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் எழுதும் கடிதங்கள் அவர்களது குடும்பத்துக்கு வந்து சேர்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இதுவரையும் பாகிஸ்தான் சிறையில் உள்ள நமது மீனவர்களை சென்று சந்திக்காத நிலை தொடர்கிறது.
மேலும் வெளிநாட்டு சிறையில் வாடுகின்ற மீனவர்களின் குடும்பத்தினருக்கு அன்றாட வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசு தினம் 350 ரூபாய் வீதம் தினப்படி வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் சிறையிலும் சவுதி அரேபியா சிலையிலும் குவைத் சிறையில் உள்ள 14 தமிழகத்தை சார்ந்த மீனவர்களுக்கும் 14 மாதங்களாக தினப்படி குடும்பத்தாருக்கு இந்நாள் வரை வழங்கப்படாமலே இருக்கின்றது. எனவே தமிழக அரசு வழங்கும் தினப்படி உடனடியாக வழங்கி அந்த மீனவர்களுடைய குடும்பத்திநர்களை வறுமையிலிருந்தும் பசியிலிருந்தும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வத்தார்கள்.
இதுபோன்று மீனவர்களுக்கு தேசிய, சர்வதேச பிரச்சனை வருகின்ற பொழுதும் அல்லது தாங்கள் மீன் பிடிக்கின்ற பகுதிகளில் பிரச்சனைகள் வருகின்ற பொழுதும் மீனவர்களுக்கு உதவி செய்வதற்காகவும், மீனவர் நலத்திட்டங்களை மீனவர்களுக்கு அரசு கொண்டு சேர்ப்பதற்கும், மீனவருடைய தேவைகளையும் கோரிக்களையும் அரசுக்கு கொண்டு செல்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மீனவர்கள் நலக்குழு ஒவ்வொரு கடலோர மாவட்டங்களிலும் மாநிலத்திலும் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மீன் கழிவுகளை பயன்படுத்தி மதிப்பீட்டு பொருட்கள் உரம் மற்றும் எஎண்ணெய் போன்றவை தயாரிப்பதற்கு திட்டங்கள் வகுக்கவும், ஏற்கனவே தனிப்பட்ட முறையில் மீன் கழிவுகளைக் கொண்டு உரம், எண்ணெய் தயாரிப்புகளை அரசுகொள்முதல் செய்து அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விற்பனைச் செய்யவும் உரிய திட்டங்கள் வகுக்கவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

