• Sun. Oct 6th, 2024

பழனியில் வேல் சிலை அகற்றம்..,
பக்தர்கள் அதிர்ச்சி..!

Byவிஷா

Feb 2, 2023

பழனி சண்முகநதியில் தைப்பூசத்தை முன்னிட்டு நான்காம் ஆண்டாக வேல் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் அதிகாலையில் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி சண்முகநதியில் தூய்மைப்பணி மற்றும் சண்முகநதி ஆராத்தி நிகழ்ச்சிகளை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வருகின்றன. அதே போன்று தைப்பூசத்தின் போது சுமார் 24 அடி உயரமுள்ள பித்தளையினாலான வேல் சிலையை அங்கு வைத்து திருவிழா முடிந்த பின் அகற்றுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் வேல்சிலை அங்கு வைக்கப்பட்டது.
தைப்பூசத் திருவிழா வருகின்ற 7ம் தேதி முடிந்த பின்னர் இந்த சிலையை அகற்றி விடுவதாக வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர். எந்தவித பிரச்சினையும் இன்றி வழக்கம்போல வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலைக்குள் வேல் சிலையை அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதிகாலை அந்த சிலை அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாலை வேல்சிலை பலத்த காவல் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. பொக்கலைன், கிரேன் உதவி கொண்டு சிலையின் பீடம் தகர்க்கப்பட்டு சிலை பிரித்து எடுத்து லாரியில் ஏற்றி காவல் துறையினர் கொண்டு சென்றனர். இதை தடுக்க முயன்ற பக்தர்கள் சிலரை கைது செய்து காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
சண்முகநதியில் பக்தர்கள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த வேல் சிலை திடீரென ஏராளமான காவல் பாதுகாப்புடன் அகற்றப்பட்டதை அங்கிருந்த பக்தர்கள் பார்த்து திகைத்தனர். இது தொடர்பாக பக்தர் ஒருவர் கூறுகையில் நான்கு ஆண்டுகளாக எந்த இடையூறுமின்றி வேல் வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென அதிகாரிகள் சிலையை அகற்றுமாறு தெரிவித்தனர்.

காலஅவகாசம் கூட வழங்காது வேல்சிலையை அகற்றுமாறு கூறினர். பின்னர் காலையில் சிலையை அகற்றியும் விட்டனர். எந்த ஆக்கிரமிப்பும் இன்றி சிலை வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சரும், அரசியல் பிரமுகர்களும், முருகபக்தர்களும் சிலை தைப்பூசம் நிறைவு பெறும் வரை மீண்டும் வைத்து வழிபாடு நடத்த வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *