சாத்தியார் அணையில் இருந்து பாசன வசதிக்காக அமைச்சர் பி.மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அணை முழுவதுமாக நிரம்பி நேற்று முதல் மறுகால் பாய்ந்தது. இதையடுத்து தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் இப்பகுதி பாசன வசதி பெரும் 11 கிராம கண்மாய்களுக்கு சாத்தியார் அணையிலிருந்து சுமார் 1500 ஏக்கர் நிலங்களுக்கு 35 கன அடி வீதம் இன்று காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இந்த அணைக்கு சுமார் 35 கன அடி வீதம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. சுழற்சி முறையில் 11 கிராம கண்மாய்களுக்கு 18 நாட்களுக்கு 25 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற் பொறியாளர் ஹபீப், உதவி பொறியாளர் பிரபாகரன், சாத்தியார் அணை பணியாளர்கள் மாவட்ட அவை தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மற்றும் இப்பகுதி பாசன விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் சாத்தியார் அணை கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் அணையை முழுவதுமாக தூர்வாரி சிறு மலை குட்டுகளை அகற்றி அணையை விரிவுபடுத்தி அதிக அளவில் தண்ணீர் தேக்க மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.