மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் மாநகராட்சி மண்டலம் 1 மற்றும் மண்டலம் 2க்கு உட்பட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு அப்பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்பேரில் மண்டலம் 1 மற்றும் மண்டலம் 2 க்குட்பட்ட மழையினால் பாதிக்கப்பட்ட பகுதி பொது மக்களுக்கு தொற்று நோய்கள் பரவாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக மழைக்கால காய்ச்சல் தடுப்பு முகாம் சுமார் 60 இடங்களில் நடைபெற்றது.
நாளை (28.10.2024) சுமார் 100 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
மேலும், மழை பாதிப்புக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இம்முகாம்களில், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (27.10.2024) நடைபெற்ற காய்ச்சல் முகாமில் மொத்தம் 4708 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில், 5 வயதிற்குட்பட்ட 439 குழந்தைகளும் பரிசோதனை செய்தனர். காய்ச்சல் பரிசோதனையில் 16 நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறியும், 2 நபர்களுக்கு வயிற்று போக்கும், இதர நோய் 36 நபர்களுக்கும் கண்டறியப்பட்டு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் (தொற்றுநோய் பிரிவு) மரு.செந்தில்குமார், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.