• Mon. May 29th, 2023

உண்மையான பார்வை!..

Byவிஷா

Oct 23, 2021

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு ஒருவன் சென்றான்” என்றார்.


மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?” என்று பணிவுடன் கேட்டான்.


உடனே துறவி “மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்.” என்று சொன்னார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *