

தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூன்று நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கியது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது தடைபட்டது.
இதற்கிடையே தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் பழங்காநத்தம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ‘பொது விநியோக திட்டத்துக்கு என்று தனித் துறை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட. 17 சதவீதம் அகவிலைப்படி உடன், அரசு பணியாளர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், நியாயவிலை கடைகளில் புதிய 4 ஜி சிம் வழங்க வேண்டும், இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், செல்லத்துரை உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
