



அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
பாஜக ஆட்சி நடக்கும் திரிபுராவில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பாஜக ரத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா “காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன. ஆனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார். நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும். பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019-ம் ஆண்டு, காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர்” என்று கூறினார்.

