• Tue. Nov 29th, 2022

அக்.2ல் தமிழகம் முழுவதும் பேரணி: திருமாவளவன்

ByA.Tamilselvan

Sep 26, 2022

அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி அக்.2ல் தமிழக முழுவதும் பேரணி திருமாவளவன் அறிக்கை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ……சங்க காலம் முதல் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற உலகளாவியப் பார்வையோடும், பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வானளாவிய கோபுரங்கள் கொண்ட திருக்கோவில்கள் நிறைந்த இந்த மண்ணில்தான் சமணமும், பவுத்தமும் நீண்ட நெடுங்காலம் வேரோடித் தழைத்திருந்தன. சமயக் காழ்ப்பு இல்லாமல் அனைவரும் சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கைக்குச் சான்றாக திகழும் நிலம் தமிழ் நிலம் ஆகும்.
சமய சச்சரவுகளுக்கு இங்கே என்றும் இடம் இருந்ததில்லை. தமிழ்ச் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஆன்மீகம் என்பது அனைத்து உயிர்களின்மீதும் அன்பு செலுத்துவது, உயர்வு தாழ்வு பார்க்காதது, தமர்-பிறர் எனப் பேதம் பாராட்டாதது. இப்படி அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் இந்த மண்ணில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன. வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் பெயர் போன சீர்குலைவு சக்திகள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கப் பார்க்கின்றன. கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை காவிமயமாக்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கின்றன.
இது தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுப்பது மட்டுமின்றி வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான சதித்திட்டமாகும். இந்தப் பிளவுவாத சக்திகளைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய புதுமை வாய்ந்த ஊடக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு பொய்களைப் பரப்புகிற இந்தப் பிரிவினைவாதிகள் தமிழ்நாட்டை வெறுப்பின் விளைநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். அவர்களது வெறுப்புப் பரப்புரைக்கு எதிராக அன்பை, அமைதியை, நல்லிணக்கத்தை முன்னெடுப்போம். அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ம் நாள், அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தித் தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமூக நல்லிணக்கப் பேரணிகளை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தப் பேரணியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் சனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்று தமிழ்ச் சமூகத்தின் தனித்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட முன்வரும்படி அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *