போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜரானார்.
தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், நடிகைகள் சார்மி, முமைத்கான், ரகுல் பிரீத் சிங் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது. இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. நடிகைகள் ரகுல் பிரீத் சிங், ராணா, ரவிதேஜா இயக்குனர் புரி ஜெகநாத், நடிகை சார்மி உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நடிகை சார்மி, அமலாக்கத் துறை முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் அமலாக்கத்துறை முன் இன்று காலை ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.