• Sat. Nov 2nd, 2024

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ராஜபட்சே ஆலோசனை

இலங்கையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நூலன்ட் இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். இவர் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், இவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ் வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில், அதிபர் ராஜபட்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடையிலான கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) நடைபெறவுள்ளது என்று அமெரிக்க பிரதிநிதி விக்டோரியாவிடம் கூறினேன் என்றார்.
இதுகுறித்து விக்டோரியா நூலன்ட் கூறுகையில், ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அதிபர் ராஜபட்சே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்.

ராஜபட்சே 2019ஆம் ஆண்டு நவம்பரில் அதிபராக பதவியேற்றார். அதன் பிறகு இதுவரை ஒரு முறை கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அதிபர் ராஜபட்சேவை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் அதிபர் மாளிகை முன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் சமூகத்தினரின் அரசியல்சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவை திருத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்தியா-இலங்கை இடையே 1987ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தனே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. அதில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *