பவன் கல்யாண் நடித்துள்ள ‘பீம்லா நாயக்’ வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டதற்கு இயக்குநர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றனஇன்னொரு பக்கம் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்’ படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திர சாகர் இயக்கியுள்ள இப்படத்தில் பவன் கல்யாண், ராணா நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று(டிச.21) ‘பீம்லா நாயக்’ படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகவில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இப்படம் பிப். 25-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
‘பீம்லா நாயக்’ படக்குழுவின் இந்த அறிவிப்புக்கு ‘ஆர்ஆர்ஆர்’ இயக்குநர் ராஜமெளலி தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், ”பீம்லா நாயக் படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளி வைத்த சின்னபாபு மற்றும் பவன் கல்யாண் இருவருக்கும் நன்றிகள். படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதே போல வெளியீட்டுத் தேதியை மாற்றிய ‘எஃப்3’ படக்குழுவுக்கும், தில்ராஜுவுக்கும் நன்றி.
இதற்கான முன்னெடுப்பைத் தொடங்கியவர் மகேஷ்பாபுதான். ‘சர்காரு வாரிபாட்டா’ படம் பொங்கல் ரிலீஸுக்கு ஏற்ற படம் என்றாலும் அதனை கோடை விடுமுறைக்கு மாற்றி ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கினார். என்னுடைய ஹீரோவுக்கு நன்றி. அத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் ராஜமௌலி கூறியுள்ளார்.